பத்திரிக்கை செய்தி
திமுகவும் தமிழக அரசும் மத்திய அரசிடம் மேகதாது அணை கட்டுவது குறித்து இன்னொரு நடுவர் மன்றம் அமைத்திட வலியுறுத்தக் கூடாது.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் வேண்டுகோள்.
காவிரி நடுவர் மன்றம் 5.2.2007ல் அறிவித்த இறுதி தீர்ப்பின் படியும் அதைத் தொடர்ந்து 16.2.2018ல் அளித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படியும் 177.25 டிஎம்சியை நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமனவும் புதிய அணைகள் எந்தவொரு மாநிலங்கள் ஒப்புதல் இன்றியும் கட்ட கூடாது எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கர்நாடக ஒரு முறை கூட இந்த தீர்ப்பின் படி நடந்தது இல்லை.நடுவர் மன்றத் தீர்ப்பையும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பையும் நடைமுறைபடுத்தாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த ஆண்டும் மே, ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை கர்நாடக இது வரை வழங்கவில்லை இதனால் ஜுன் 12 ல் திறக்கப்படவேண்டிய மேட்டூர் அணை பாசனத்திற்கு இது வரை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை பரிந்துரைத்தும் கர்நாடக தட்டிக் கழித்து வருகிறது.அது மட்டுமின்றி, மேகதாது அணை கட்டியே தீர்வோமென கங்கணம் கட்டி அலைகிறது.
இந்நிலையில் தமிழக மக்கள், காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டு மொத்த குரல் என்பது இந்த ஆண்டுக்கான நீரை மாதம் தோறும் திட்டமிட்டப்படி பெறுவதும் மேகதாது அணை கட்டாமல் இருக்க கர்நாடகா மற்றும் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பது தான். ஆனால், அதை விட்டு விட்டு திமுக கட்சியானது மேகதாது அணைக் குறித்து புதிய ந்டுவர் மன்றம் அமைக்க வேண்டுமனவும் காவிரி பிரச்சனை குறித்த அனைத்து விவகாரங்களையும் அதில் முறையிட்டு முடிவெடுக்கலாம் என்று வலியுறுத்தி வருகிறது. இதனை தமிழக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது.இத்தகைய முடிவு காவிரி நடுவர் மன்ற, உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்களை நீர்த்துப் போக செய்யவும் மேகதாது அணைக் கட்டவும் வாய்ப்பாக அமைந்து விடும் என்று தமிழக மக்கள், காவிரி டெல்டா விவசாயிகளும் கூறிய பின்னரும் திமுக தன் நிலையை மாற்றவில்லை என்பது வேதனையானது.
இந்நிலையில் கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் காவிரி பிரச்சனைக் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப் போவதாக திமுக அறிவித்து உள்ளதை வரவேற்கிறோம். ஆனால், புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை வலியுறுத்தி அதனால் புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் மேகதாது மட்டுமின்றி காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையும் அதனை உறுதி செய்த உச்ச நீதி மன்ற தீர்ப்பையும் நீர்த்துப் போக செய்திட வாய்ப்புண்டு. எனவே, நடுவர் மன்ற தீர்ப்பின் படி நீரைத் தாராத கர்நாடக அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்துங்கள்.ஆனால், புதிய நடுவர் மன்றத்தை திமுகவும் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டாமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக் கேட்டுக்கொள்கிறது.
க.சக்திவேல்
தலைவர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி