தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
2026 தமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிக்கை
(To donwload the Manifesto in pdf, click Here. கொள்கை அறிக்கையை பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவிறக்கம் செய்ய, இங்கே சொடுக்கவும்).
பகுதி – I
ஆட்சியின் முதன்மை அடிப்படைகள்
- தமிழக வளர்ச்சியின் கூறுகளான விவசாய, உற்பத்தி, சேவைத் துறைகளின் பங்களிப்புக்களில் விவசாயத் துறையின் பங்களிப்பு முதன்மையாக்கப்பட்டு, உற்பத்தியும் சேவைத் துறைகளின் பங்களிப்புக்கள் இரண்டாம் தன்மையாக்கப்படும். உணவு, உடை, உறையுள் ஆகியவை இல்லாத அனைவருக்கும் அளிக்கப்படும்.
* தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுத்தல்
* கல்வி, மின்சாரம், மருத்துவம் அரசே அனைவருக்கும் வழங்குதல்.
- வேலை வாய்ப்பைப் பெருக்கி வறுமையை ஒழித்தல்.
- ஊழல்வாதிகளுக்கு உடனடி சிறை, ஊழல் சொத்துக்கள் பறிமுதல் என ஊழலை வேரோடு ஒழித்தல்.
பகுதி -2
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் அணுகு முறை
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அஇஅதிமுக ஆட்சிகள் இந்தியா விடுதலைப் பெற்றதிலிருந்து ஆட்சி செய்து 1967க்கு பின்னர் தமிழகத்தை மாறி,மாறி திமுகவும், அதிமுகவும் ஆட்சி செய்தாலும் ஏறக்குறைய 8 கோடி பேர் உள்ள தமிழக மக்கள் தொகையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே ஏறக்குறைய ஆறு கோடி மக்கள் இன்றும் வாடி, வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 70 சதவிகித மக்கள் நம்பி இருக்கக்கூடிய வேளாண் தொழிலானது மிகப்பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. காவிரி,முல்லை பெரியாறு,தென்பெண்ணை,பாலாறு இப்படி தமிழகத்தின் நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களின் முறையற்றப் போக்கினால், சட்டப்படியும் நியாயப்படியும் வர வேண்டிய நதி நீர் தமிழகத்திற்கு கிடைக்காமல், வேளாண்மை பாதிக்கப்பட்டு விவசாயமும் விவசாயிகளும் துயருக்கு ஆட்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம், வளர்ச்சி என்ற பெயரில் பொன் விளையும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயம் பொய்த்துப் போக வேளாண்மை துன்பப்படுகிறது. தமிழ் நாட்டில் மிகப் பெரிய அளவில் சிறு, குறு, குடிசைத் தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் தமிழக மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த இவைகள் முற்றிலும் செயல் இழந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் இல்லாத தொழில்துறை, சேவைத்துறை ஆகியவை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. எனவே, திமுக,அதிமுக ஆட்சிகளில் தமிழர்களின் எந்த முன்னேற்றத்திற்கும், எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தொழில் வளர்ச்சி என்பது பன்னாட்டு தொழில் நிறுவனங்களினாலும், இந்திய பெருமுதலாளிகளின் தொழில் நிறுவனங்களாலும் ஏற்பட்டதே ஆகும். இதனால் அடித்தட்டு மக்களுடைய பொருளாதார வளர்ச்சி முற்றிலும் இல்லை. திமுக,அதிமுகவினுடைய ஆட்சி காலங்களில் சாதாரண மக்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி எட்டாக்கனியாகியுள்ளது. அது மட்டுமின்றி இரு மொழி கொள்கை கொண்ட திமுக,அதிமுக கட்சிகள் தமிழ் வழிக் கல்வியைப் புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வியைத் திணிப்பதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே, காங்கிரஸ் , பாஜக , திமுக, அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய அடிப்படை மாற்றங்களுக்காக எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை என தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கருதுகிறது.
தமிழக மக்களின் ஏற்றத்திற்கான கொள்கைகளைத் திட்டங்களைத் தரவல்ல, செயல்படுத்தக்கூடிய ஒரே இயக்கமாக மக்கள் மத்தியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சிமட்டுமே இருக்கும் என உறுதியாகக் கருதுகிறோம்.
இத்தகைய கொள்கைகளைக் கொண்ட தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தமிழ்த் தேசிய அடையாளத்தை மீட்டெடுக்க, தமிழர்களின் பொருளாதார இறையாண்மையை மீட்டெடுக்கவும், தமிழர்களினுடைய பண்பாடு காக்கப்படவும் அது தவிர, புதிய மாற்று பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்தும் 2026 தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அணுகுமுறை மேற்கொள்வதென தீர்மானிக்கிறோம்.இச்சூழ்நிலையில் தமிழகம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு தீர்வாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் 2026 சட்ட மன்றத் தேர்தல் அறிக்கையை அளிக்கிறோம்.
பகுதி -3
வேளாண்விளைப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்யப்படும்.
வேளாண்விளைப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயத்தில் தேசிய வேளாண்மை ஆணையம் அறிவித்த முறையை மத்திய, மாநிலஅரசுகள் செய்யத் தவறி வருகின்றன.தேசிய வேளாண்மை ஆணையம் அறிவிப்பின் படி,சாகுபடி செலவோடு குறைந்தது 50% தொகை சேர்த்துஅனைத்து வேளாண்விளைப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.ஆனால்,இத்தகைய நடைமுறை நெல்,கரும்புக்குக் கூடசெய்யப்படுவதில்லை.அது மட்டுமின்றி,வேளாண்விளைப் பொருட்களுக்கும் அடிப்படை விலையோடு சேர்த்து மதிப்புக் கூட்டு விலையும் கணக்கில்கொண்டு விலை நிர்ணயம் செய்யப் பட வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். இதற்காக, வேளாண்விளைப் பொருட்களுக்குஅடிப்படை விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்ய தமிழக முற்போக்கு மக்கள் கட்சி பாடுபடும்.
1. கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தல்
கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமானப் பகுதியாகும். கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமானது. கச்சத் தீவை தமிழகத்தில் இருந்தஇரு தமிழர்களுக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, குத்தகைக்கு கொடுத்துள்ளார் என்கின்ற ஆதார ஆவணம் ராமநாதபுரம் நில நிர்வாகப் பதிவேட்டில்ஆதாரப்பூர்வமாக உள்ளது. கச்சத் தீவு பற்றி இப்படி பல ஆதாரங்கள் தமிழகத்தில் உள்ளது. கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோயில்திருவிழாக்களில் தமிழக மீனவர்கள் ஆண்டு தோறும் தொடர்ந்து பங்கேற்று பல ஆண்டுகாலம் கொண்டாடி வந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் பொழுதெல்லாம் கச்சத்தீவில் தங்கி ஒய்வெடுத்தும், மீன்பிடி வலைகளை உலர்த்தியும் கச்சத்தீவைநீண்டகாலமாகத் தமிழக மீனவர்கள் பயன் படுத்திவந்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் நாட்டோடு இணைந்தப் பகுதியாகும்.இந்தியாவின் எந்த ஒருப் பகுதியையும் வேறு நாட்டிற்கு அளித்திடக் கூடிய உரிமை இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவின் மத்திய அரசிற்கு இல்லை. எனவே, கச்சத்தீவை தமிழகத்தோடு இணைந்தப் பகுதியாக அறிவிக்கப்படும்.
2. தமிழகத்தின் நீர் பாசன திட்டங்கள் மத்திய அரசு உதவியுடன் உடனடியாக நிறைவேற்றப்படும்.
தமிழகத்தின் மேற்கு மண்டல நீர் பாசன திட்டங்களையும் பிற நீர்ப் பாசனத்திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்றப்படும். முல்லை பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மொத்தஅளவான 152அடி நீரைத்தேக்கலாம் என்பது உறுதிச் செய்யப்படும்.அணையின் பாதுகாப்பு தமிழக அரசிடமே இருந்திடும் வகையில்ஆணை பிறப்பிக்கப்படும்.அதைப் போலவே, பாலாற்றில் தடுப்பு அணைக் கட்டி,பாலாற்று நீரை முற்றிலுமாக தடுக்கப் பார்த்திடும்ஆந்திர அரசின் செயல் தடைச் செய்யப்படுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி உறுதி அளிக்கிறது.
3. சிறு தொழில்களுக்குப் பாதுகாப்பு
கோடிக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பைத் தரச்கூடியதும் உள்ளூர் ஆதாரங்களை பெருமளவில் பயன்படுத்தக்கூடியதுமான சிறுதொழில்கள் நசிந்து போக உலகமயமாக்கல் கொள்கைகளும் மத்திய அரசு அளித்தப் பாதுகாப்பை முற்றிலுமாக விலக்கிக்கொண்டதும் காரணமாகும். இதனைக் களைந்திட சிறு தொழில்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். உள்ளூர் ஆதாரங்களைபயன்படுத்தும் எல்லா தொழில்களும் சிறு தொழில் பட்டியலில் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட தொழிலாகஅறிவிக்கப்படும்.
4. வேலைவாய்ப்புக்கள்
வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய அளவில் சிறு தொழிற் பேட்டைகள் துவங்கப்படும். இன்றியமையாத பொருட்களின் உற்பத்தியும் விநியோகமும் மக்களிடமிருந்தால் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழியும் என்ற தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களின் உற்பத்தி முறைக களிலும் மனித ஆற்றலை பெருமளவு பயன்படுத்தும் விதமாக மாற்றி அமைக்கப்படும். தமிழக மக்களின் வேலை வாய்ப்பை பறித்திடும் வகையில் அமைந்துள்ள பிற மாநிலத்தவர் தனியார் துறை வேலை வாய்ப்புக்களில் அமர்த்தப்படுவதை தடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
5. வேலையற்ற காலங்களில் வாழ்வாதார நிதி
வறுமை என்பது ஒழிக்க முடியாத தன்மையை கொண்டதாக இந்தியாவில் மாறி வருகிறது. இதற்கு அடிப்படையாக நாட்டில்நிலவிடும் வேலையற்றத் தன்மையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியற்ற பொருளாதார நிலையுமே காரணமாகும்.வேலையற்றத்தன்மையானது மேலும் பெருகுவதற்கு தான் வாய்ப்பு உள்ளதே தவிர குறைந்திட வாய்ப்பு இல்லை என உறுதியாககூறப்படுகிறது.2013ல் உலக வங்கி அறிக்கையின் படி உலகமுழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் உள்ளார் எனத் தெரிவிக்கிறது.ஆக்சுபோர்டுவறுமை மற்றும் மனித வளர்ச்சி முயற்சி என்ற அமைப்பின் கணிப்பின் படி இந்தியாவில் 65 கோடி பேர் (மக்கள் தொகையில் 53.7%) வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது.இந்தியாவில் வளர்ச்சியற்ற பொருளாதார நிலையே நீடிக்குமெனபொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்நிலையில்,வேலையற்று உள்ளவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு வேலை அளிப்பதைஅடிப்படை உரிமையாக்கப்பட்டு,வேலையற்ற காலங்களில் வாழ்வாதார நிதி மாதந்தோறும் அளிக்கப்படும்.
6. பிற மாநிலத்தவர் தமிழகத்தில் அசையா சொத்துக்களை வாங்க தடை செய்தல்
பிற மாநிலத்தவர் அசையா சொத்துக்களை கட்டுப்பாடு இல்லாமல் வாங்குவதற்கு வழிவகை இருப்பதால் , அவற்றை முதலீடுகளாக செய்வதால் தமிழகத்தில் ஏற்றத் தாழ்வுகளை பெருமளவில் ஏற்படுத்தப்படுவதோடு, அதன் வழியாக தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களை சிதைக்கும் வகையிலும் பிற மாநிலத்தவர் ஈடுபடுவதால் தமிழகத்தில் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பிற மாநிலத்தவர் வாங்க தடை செய்யப்படும்.
7. சில்லரை வணிகத்தில் பெரு முதலாளிகளுக்கு தடை விதிக்கப்படும்.
பெரும்பான்மையோர்க்கு வேலைவாய்ப்பாகவும், கிராமங்களில், சிறு நகரங்களில் முக்கிய பங்காற்றிடும் சில்லரை வணிகத்தில் வெளி நாட்டு முதலீட்டுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தடை விதிக்கப்படும். மேலும் பிற மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அடுத்த மாவட்டங்களில் சில்லரை வணிகத்தில் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்படும்.
8. நீர் நிலை , மேய்ச்சல் , அரசு புறம்போக்குகளில் வசித்து வரும் மக்களுக்கு அவர்கள் குடியிருந்து வரும் இடங்கள் உரிமையாக்கப்படும்
மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னர் சுற்றுப்புற சூழல் என்பவை கருத்தில் கொள்ள வேண்டியது தேவையில்லை என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீர் நிலை , மேய்ச்சல் , அரசு புறம்போக்குகளில் வசித்து வரும் மக்களுக்கு அவர்கள் குடியிருந்து வரும் இடங்கள் உரிமையாக்கப்படும்.
இத்தகைய செயல் திட்டங்கள் நிறைவேறிட தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.
Visit: www.tmmkatchi.com
Email: [email protected]